15 சதவீத இடஒதுக்கீட்டை வெல்வதே நமது லட்சியம்- அன்புமணி ராமதாஸ்
- அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை வன்னியர்கள் இழந்திருக்கின்றனர்.
- 15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் 21 பாட்டாளிகளும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர். அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.
தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசு தவறியதால் கடந்த 4 ஆண்டுகளில் 3600 எம்.பி.பி.எஸ் இடங்களையும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் வன்னிய மாணவர்கள் இழந்திருக்கின்றனர்.
அதேபோல், நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000-க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000-க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000-க்கும் கூடுதலான இடங்களும் பறிபோயிருக்கின்றன.
மேலும் அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளையும் வன்னியர்கள் இழந்திருக்கின்றனர். வன்னியர்களுக்கு எதிரான இவ்வளவு பெரிய சமூகநீதி துரோகத்தை செய்தது திராவிட மாடல் அரசு தான். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான்.
15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும், தியாகங்களையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் 21 ஈகியர்களின் நினைவு நாளில், நமக்கான சமூகநீதிப் போராட்டப் பயணத்தை அவர்களின் வாழ்த்துகளுடன் தொடருவோம்.
அத்துடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.