காவல் நிலையத்தில் அதிகாரி முன்னிலையில் பா.ம.க. நிர்வாகியின் கழுத்தை அறுத்த ரவுடிகள்- அன்புமணி கண்டனம்
- பா.ம.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கழுத்தறுபட்ட வினோத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அச்சிறுப்பாக்கம் வட்டம் மதூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் செல்வராஜ், வினோத், விக்னேஷ், சந்தோஷ்குமார், சேகர் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் வந்த பாதிரி காலனியைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 5 பேர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் தகராறு செய்தனர்.
இது தொடர்பாக பா.ம.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே நேரத்தில் எந்தத் தவறும் செய்யாத பா.ம.க.வினர் மீதும் காவல்துறையினர் பொய்வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இரு தரப்பினரும் அண்மையில் நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டு கடந்த சில நாள்களாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
பா.ம.க. நிர்வாகிகள் 5 பேரும் நேற்று காலை அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுக் கொண்டு இருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் வந்த விஜயகுமாரும் மற்றவர்களும் பா.ம.க.வினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட காவலர்கள் கண் எதிரிலேயே பா.ம.க. நிர்வாகி வினோத் என்பவரை விஜயகுமாரும் மற்றவர்களும் கழுத்தை அறுத்து படுகொலை செய்ய முயன்றனர். இதில் கழுத்தறுபட்ட வினோத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
வினோத்துக்கு தரமான மருத்துவம் அளிப்பதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.