ஆவின் நெய் விலை உயர்வு - அன்புமணி கண்டனம்
- உண்மையில் தி.மு.க. அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை.
- தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை 5-ம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நெய்யின் விலையை அரை கிலோ வுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான நாடகம். இந்த ஏமாற்று வேலையை மக்கள் நம்ப மாட்டார்கள்.
உண்மையில் தி.மு.க. அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை. மாறாக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்காக செப்டம்பர் 22-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை நடத்தி வந்த ஏமாற்று நாடகத்தை இப்போது தி.மு.க. அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை தி.மு.க. அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் தான் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டண உயர்வு, 175 சதவீதம் வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, வாகன வரி உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மறைமுகமாக உயர்வு என அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை சுமத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் நெய் விலையை தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து தி.மு.க. தப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.