அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளுமா?- பாஜக புறக்கணிக்க திட்டம்
- நாம் தமிழர் கட்சி உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
- அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது.
சென்னை:
பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளை மத்திய அரசு 2026-ல் மேற்கொள்ள இருப்பதாகவும் அப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கும் போது தமிழ்நாட்டிற்கு 8 தொகுதிகள் வரை குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மார்ச் 5 அன்று தலைமைச் செயலகத்தில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டுகள், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய போது, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களில் இடங்கள் அதிகரிக்கும் என்றும் தமிழ் நாட்டில் தொகுதிகள் குறையாது என்றும் உறுதி அளித்துள்ளார்.
இந்த சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
இப்பிரச்சனை குறித்து கடந்த 2003-ம் ஆண்டே பேசி எதிர்ப்பு தெரிவித்து விட்டதாகவும் தேர்தல் முறையில் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனியாக போராடுவதால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறி உள்ளார்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளும், அதன் ஆதரவு கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுதியாக உள்ள நிலையில் பா.ம.க.வும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளுமா? புறக்கணிக்குமா? என்பது பற்றி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகி கூறியதாவது:-
அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது. அதற்காக தொடர்ந்து குரல் கொடுக் கும். அது காவிரிப் பிரச்சனையாக இருந்தாலும், நீட் விஷயமாக இருந்தாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சட்டப் போராட்டம் நடத்தி அதில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும்.
ஆனால் தி.மு.க. இப்போது திடீரென தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கையில் எடுத்து பேசுகிறது. பாராளுமன்றம் நடந்த போது தி.மு.க. எம்.பி.க்கள் அங்கு இதை பேசியிருக்க வேண்டும். அங்கு பேசாமல் இப்போது இது பற்றி பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்முறை சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில் இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் வெறிச் சோடி கிடந்தது. நிர்வாகமே ஸ்தம்பித்து விட்டது.
இந்த விஷயத்தில் தி.மு.க. அரசின் தோல்வியை மறைக்கவும், மடைமாற்றம் செய்யவும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
எனவே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதால் பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பது எவ்வாறு நடைபெறும் என்பதை முழுமையாக அறிந்து ஓரிரு நாளில் இதில் முடிவெடுப்பார்.
எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இரு தினங்களில் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.வும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பை பொறுத்த வரை தென் மாநிலங்களில் தற்போது இருக்கும் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனையை காரணம் காட்டி இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது ஏன்? தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்றோ அல்லது இப்போது தொகுதி மறு சீரமைப்பு நடக்கப்போகுது என்றோ யார் சொன்னது? என்பதை தெரிவித்தால் பா.ஜ.க.வும் பங்கேற்கும் என்று அண்ணாமலை ஏற்கனவே அறிவித்தார்.
இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா தமிழகத்தில் எம்.பி. தொகுதிகள் குறைய போவதில்லை என்று உறுதி மொழி அளித்தார்.
எனவே, பா.ஜ.க. கலந்து கொள்ளாது என்று கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதே போல் தே.மு.தி.க., தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.