மே 2-ல் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்
- அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு அ.தி.மு.க. நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உள்ள சிறுபான்மையின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சற்று அதிருப்தி அடைந்து உள்ளனர்.
அவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும் போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும்என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளையும் இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழக செயலாளர்க்ள, மாவட்டக் கழக செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிததோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.