மதுபான கடையை அகற்றக்கோரி பள்ளிப்பாளையத்தில் 15-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
- மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
- பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி பள்ளிப்பாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் எப்.எல்.2 மதுபானக் கடை நடைபெற்று வருகிறது. இந்த மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அதே போல், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளும் செயல்பட்டு வருவதன் காரணமாக, எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வரும் இந்த இடத்தில் மதுபானக் கடை இருப்பதால், பள்ளி மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிப்பாளையம் நகராட்சி, பை பாஸ் சாலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருந்து வரும் எப்.எல்.2 மதுபானக்கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி இந்த மதுபானக்கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், பள்ளிப்பாளையம் பஸ் நிலையம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.