சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்
- மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.
- ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த பணியை தலைமை கழக மேலாளர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் பாதை கழக நிர்வாகிகள் உணவருந்தும் இடம் உணவு தயாரிப்பு கூடம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அமருமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:-
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த கழகத்தின் செயற்குழு பொதுக்குழு ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இல்லாமல் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் வகையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் எல்லையான கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். சாலை எங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள் மாஇலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.
இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.