ஆம்புலன்ஸை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியது மனிதநேயமற்ற செயல்- செல்வப்பெருந்தகை
- மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
- அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
திருச்சி துறையூரில் அம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயலாகும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.
அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.
அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.