தமிழ்நாடு செய்திகள்

வீடியோ: விழுப்புரத்தில் தனியார் பள்ளிக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2025-08-13 11:51 IST   |   Update On 2025-08-13 12:15:00 IST
  • மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • மாணவன் உயிரிழந்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் வீட்டில் இருந்து மோகன்ராஜ் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளி வளாகத்தின் வழியாக வகுப்பறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இந்த காட்சிகள் பள்ளி வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பதறியடித்து கொண்டு ஓடி வந்து மாணவனை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மோகன் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து அறிந்த விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இச்சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், ஏ.எஸ்.பி. ரவீந்திரகுப்தா மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

Tags:    

Similar News