தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு- அமைச்சரவையில் ஒப்புதல்
- தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
- அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதில் 30 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நல வாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக் கூடிய நலன்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதற்கு இந்த அரசு முனைப்புடன் உள்ளது.
நமது முதலமைச்சர் கலைஞர் காலத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வரும் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் நலனிலும் முதலமைச்சரின் அரசு பெரும் கருணைக் கொண்டதாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.
தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.
தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். எனவே தூய்மை பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.
அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த பிறகு பரிசீலிக்கப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.