தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் உரிமம் ரத்து
- விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர்.
- காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.