தமிழ்நாடு செய்திகள்

அரசு-தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 400 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி- சிறப்பு கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது

Published On 2025-11-15 12:13 IST   |   Update On 2025-11-15 12:13:00 IST
  • இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி. பி.எஸ். இடங்களை நிரப்ப 3 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 400 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லுரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 58 நிரப்பப்படாமல் உள்ளன. நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லுரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால் சிறப்பு கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இடங்கள் ஒதுக்கீட்டு நடைமுறை நாளை (16-ந்தேதி) இறுதி செய்யப்பட்டு 17-ந்தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கட்டண குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News