தமிழ்நாடு செய்திகள்

தாராபுரம் அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

Published On 2025-06-27 14:11 IST   |   Update On 2025-06-27 14:11:00 IST
  • சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
  • மாணவர்கள் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News