சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22 ஆயிரம் பணியாளர்கள்- தமிழ்நாடு அரசு தகவல்
- நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது.
- 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சராசரியாக 179.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி முதலியவை செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள 4 லட்சத்து 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
சென்னையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட 500 டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இதுபோக, 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், என்ஜினீயர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 2,149 களப்பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.