தமிழ்நாடு செய்திகள்

சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது

Published On 2025-03-31 14:31 IST   |   Update On 2025-03-31 14:31:00 IST
  • கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.
  • நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

வேளச்சேரி, அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43). வக்கீலானா இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்தார்.

இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, வக்கீல் வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் வெட்டிய கத்தியை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் சித்ரவதை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தன்று 4 பேர் கும்பல் வெங்கடேசனை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்து தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையுண்ட வெங்கடேசன் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து வக்கீல் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக வெங்கடேசனின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

கொலை தொடர்பாக வெங்கடேசனின் நண்பர்கள் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்கேதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன் மனைவி சரளா விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் கொலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உடன் இருந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேசனிடம் ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News