தமிழ்நாடு செய்திகள்

மதுரை நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2025-08-05 13:38 IST   |   Update On 2025-08-05 13:38:00 IST
  • பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
  • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பகுதியைச் சேர்ந்தவர் தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது40). இவர் மதுரையில் இருந்து தங்க நகைகளை வாங்கிக்கொண்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தங்க நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

சம்பவத்தன்று விஜய ராஜா 1.5 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு புறப்பட்டார். இதற்காக மதுரையில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்த அவர் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து நகை பையுடன் கோவிலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது விஜய ராஜாவை மர்மநபர்கள் காரில் பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது காரை அவர் முன் நிறுத்தி இறங்கிய மர்மநபர்கள் விஜயராஜா கையில் வைத்திருந்த 1.5 நகை கொண்ட பையை பறித்துக் கொண்டனர். விஜயராஜா முயன்றும் நகையை தக்க வைத்துக்கொள்ளவில்லை.

மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு பணப்பையுடன் அங்கிருந்து தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீஸ் ஏ.எஸ்.பி.யாக புதிதாக பொறுப்பேற்றிருந்த ஆஷிஷ் புனியா, தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம், சிவகங்கை ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நகை வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். விஜயராஜா நகையுடன் காரைக்குடிக்கு வருவதை முன்கூட்டியே அறிந்த மர்ம நபர்கள் தான் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News