தமிழ்நாடு செய்திகள்

கோவை கணுவாயில் குடியிருப்புகள்-சாலைகளில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை

Published On 2023-01-07 11:03 IST   |   Update On 2023-01-07 11:03:00 IST
  • யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
  • யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

யானை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியது. வனத்தை விட்டு நேராக குடியிருப்புக்குள் புகுந்தது.

பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சென்று தண்ணீர் குடித்தது. தொடர்ந்து அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை கண்காணித்து வனத்திற்கு விரட்டினர்.

இந்நிலையில் இன்று காலை அதே ஒற்றை காட்டு யானை கணுவாய் மெயின் ரோட்டில் ஒய்யார நடைபோட்டு நடந்து வந்தது. யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர். பயத்தில் அங்கிருந்த மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த யானை சாலைகளில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியிருப்புகளுக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News