தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

Published On 2023-12-23 04:42 GMT   |   Update On 2023-12-23 04:42 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது.
  • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை கடந்த மாதம் 10-ந்தேதி 70 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து 11-ந்தேதி முதல் 14-ம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் வடகிழக்குபருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் இந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியது.

இதனையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனபகுதி 3-க்கும் 1004 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வைகையாற்றின் வழியாக நேற்று காலை முதல் விநாடிக்கு 800 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கனஅடியாக திறக்கப்பட்டது. அணையிலிருக்கும் தண்ணீரை பொறுத்து கிருதுமால் நதிக்கு 10 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் விநாடிக்கு 150 கனஅடிவீதம் 300 மி.கனஅடி தண்ணீர் 58-ம் கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2284.86 ஏக்கர் நிலங்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.90 அடியாக உள்ளது. வரத்து 2190 கனஅடி, திறப்பு 1999 கனஅடி, இருப்பு 5728 மி.கனஅடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது. ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்., அணைக்கு நீர்வரத்து 1715 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 7342 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழை குறைந்துள்ளபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 5-ம் நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News