தமிழ்நாடு

வேங்கைவயல் சம்பவம்: புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் 10 பேர் நேரில் ஆஜர்

Published On 2023-11-28 09:12 GMT   |   Update On 2023-11-28 09:12 GMT
  • மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
  • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஏற்கனவே மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News