தமிழ்நாடு செய்திகள்

தென்காசி பஸ் நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்சில் பயணிகள் ஏறிய காட்சி.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நெல்லை மண்டலத்தில் 90% பஸ்கள் இயக்கம்

Published On 2024-01-09 10:36 IST   |   Update On 2024-01-09 10:57:00 IST
  • நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
  • நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது.

நெல்லை:

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பஸ்கள் இயங்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேநேரத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் முன்கூட்டியே தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலத்தில் மொத்தம் 1,660 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தென்காசியில் 4 பணிமனைகளும் உள்ளன. மொத்தம் உள்ள 18 பணிமனைகளின் மூலமாக இந்த 3 மாவட்டங்களிலும் 898 பஸ்களும் இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து பஸ்களும் பணிமனைகளில் இருந்து வழக்கம்போல் அதிகாலை முதலே புறப்பட்டன.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களுக்கு பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எவ்வித பாதிப்பும் இன்றி பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரப்படி பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது. அதேபோல் தென்காசி மாவட்டத்தின் வழித்தடங்களில் 157 பஸ்கள் வழக்கமாக இயங்கும். ஆனால் இன்று வழக்கத்தை விட 3 பஸ்கள் கூடுதலாக, அதாவது 160 பஸ்கள் இயங்கின. தென்காசி பணிமனையில் இருந்து 67 பஸ்களும். செங்கோட்டை பணிமனையில் இருந்து 40 பஸ்களும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் 488 பஸ்கள் ஓடின.

தூத்துக்குடி மாவட்ட வழித்தடத்தில் ஓட வேண்டிய 226 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை. அதிகாலையில் மாநகரில் 50 பஸ்களில் 49 பஸ்கள் ஓடின. புறநகர்களில் 34 பஸ்களில் 31 பஸ்கள் ஓடின. தொடர்ந்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கம் அதிகரித்தது. 3 மாவட்டங்களிலும் சராசரியாக 90 சதவீதம் வரை பஸ்கள் ஓடின.

நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனையில் இருந்து 67 பஸ்களும், தாமிரபரணி பணிமனை மூலமாக 55 பஸ்களும் என மொத்தம் 122 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று வண்ணார்பேட்டை புற வழிச்சாலை பணிமனையில் இருந்து 60 பஸ்களும், தாமிரபரணி பணிமனையில் இருந்து 45 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் எவ்வித சிரமமும் இன்றி பயணித்தனர்.

Tags:    

Similar News