தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் திணறும் சுற்றுலா வாகனங்கள்

Published On 2023-04-08 10:20 IST   |   Update On 2023-04-08 10:20:00 IST
  • கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது.
  • சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது புனிதவெள்ளியை தொடர்ந்து வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

இதன்காரணமாக அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மூஞ்சிக்கல், உகாதே நகர் , ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.

காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் உள்பட பொதுமக்கள் தாங்களாகவே போக்குவரத்தை சீரமைத்துக்கொண்டனர். மேலமலையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போதுமான போக்குவரத்து போலீசார் பணியமர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த அளவே போலீசார் பணியில் உள்ளதால் வேலைபளு அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News