தமிழ்நாடு

இனி இதுபோன்று நடக்காது... திருச்சி சிவாவை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

Published On 2023-03-17 15:24 GMT   |   Update On 2023-03-17 15:24 GMT
  • நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார்.
  • திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.

திருச்சி:

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். திருச்சி சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவாவை அமைச்சர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:

நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல் அமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

கே.என்.நேரு கூறுகையில், 'திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். திருச்சி சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News