தமிழ்நாடு

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்- தமிழிசை

Published On 2024-03-20 07:20 GMT   |   Update On 2024-03-20 08:22 GMT
  • பா.ஜனதா கட்சியின் தலைவராக இருந்து பின்னர் கவர்னராக மாறி தற்போது தொண்டராக இங்கு வந்துள்ளேன்.
  • நான் நான்கரை ஆண்டுகளில் 4 முதலமைச்சர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

சென்னை:

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் பதவியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முழுநேர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான பூர்வாங்க வேலைகளை டாக்டர் தமிழிசை தொடங்கிவிட்டார்.

கவர்னர் ஆவதற்கு முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டுமென்றால் கட்சியில் இணைந்து அடிப்படை உறுப்பினர் ஆக வேண்டும். அதற்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, எல்.முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் தலைவராக இருந்து பின்னர் கவர்னராக மாறி தற்போது தொண்டராக இங்கு வந்துள்ளேன். இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். கஷ்டமாக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னார். கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன். பா.ஜனதாவில் 400 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று இணைந்திருக்கிறேன். எனது உணர்வு முழுவதும் கமலாலயத்தில் தான் இருக்கிறது. ராஜ பவனங்களை விட்டு மக்கள் பவனமான கமலாலயத்தில் நுழைந்த நிகழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவர் எனக்கு ஆசீர்வதித்தார். ஆண்டு கொண்டிருப்பவர் எனக்கு அனுமதி கொடுத்தார். எனவே இந்த கமலாலயத்துக்கு வந்திருக்கிறேன். மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற வார்த்தையை 7 ஆண்டுகளுக்கு முன்பு மாநாட்டுக்கு பிரதமர்மோடி வந்தபோது நான் சொன்னேன். இப்போது வேண்டும் மோடி, மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி என்ற வாசகத்தோடு இங்கு இணைந்திருக்கிறேன்.

கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்து விட்டேனே என்று 1 சதவீதம் கூட தோன்றவில்லை. அந்த பதவியை விட பா.ஜனதா கட்சியின் சாமானிய உறுப்பினர் என்ற பதவியை தான் நான் மிகப் பெரிய பதவியாக கருதுகிறேன். நான் நான்கரை ஆண்டுகளில் 4 முதலமைச்சர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 2 பொதுத்தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆளுனர் ஆட்சியை புதுச்சேரியில் நடத்தி இருக்கிறேன். இது பா.ஜனதா கட்சி எனக்கு கொடுத்த அனுபவங்கள். எனவே மீண்டும் உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக இங்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News