தமிழ்நாடு

உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது: தமிழிசை பெருமிதம்

Published On 2024-03-03 07:06 GMT   |   Update On 2024-03-03 07:06 GMT
  • தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது.
  • கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 87 வது சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-

500 ஆண்டு கால கனவு அயோத்தி கோவில் மூலம் நனவாகி உள்ளது. ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக இருக்கும். இப்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இதற்கு காரணம் நம் நாட்டின் ஆன்மீகம்தான். ஆன்மீகத்துடன் தேசியமும் வளர்கிறது. நான் பிறந்த இந்து மதத்தை பின்பற்றுகிறேன். என் மதம் பற்றி பேசினால் மதவாதி என்கிறார்கள். மதவாதி என்கிறவர்களை நான் எதிர்க்கிறேன்.

தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது. வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்துகளை பரிமாறுவது தான் நல்ல பண்பு.

 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட காட்சி. அருகில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

நாடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாட்டு மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகமும், தேசியமும் அவசியம். கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.

ஏனென்றால் நம் உணவு பழக்கம் முறை, அழுத்தமான ஆன்மீகம்தான். பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருவார்கள். அதில் விஞ்ஞானம் உள்ளது. ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினம் கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் யோகா தினம்தான். நம் நாட்டு பழக்கவழக்கங்கள் அப்படி அமைந்துள்ளது. விவேகானந்தர் வெளிநாடு செல்லும்போது இந்தியாவை விரும்பினேன் என்றார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்போது இந்தியாவை வணங்குகிறேன் என்றார். இந்தியாவின் பண்பாடு, கலச்சாரம் நல்ல வாழ்வியலை தருகிறது. இந்து மதம் இதை சொல்லிக்கொடுக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News