காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்தது ஏன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம்
- நரேந்திரனுக்கும், சத்யஸ்ரீக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- அவிநாசி வந்த நரேந்திரன் சத்யஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்த போது அவர் பழகி வந்த வாலிபருக்கு கூகுள் பே மூலம் பணபரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டம் அவிநாசியை சோ்ந்தவா் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ (வயது 20). இவா் திருப்பூா் 60 அடி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தாா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடியை சோ்ந்தவர் நரேந்திரன் (25), கேட்டரிங் தொழில் செய்து வந்தார். சத்யஸ்ரீயும் நரேந்திரனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நரேந்திரனுடன் சத்யஸ்ரீ பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா். நேற்று காலை சத்யஸ்ரீ பணியாற்றி வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற நரேந்திரன் கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் அவரும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காதலியை கொன்று காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை நரேந்திரன் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.
நரேந்திரனுக்கும், சத்யஸ்ரீக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். 3 வருடங்களாக அவர்களது காதல் நீடித்தது. மேலும் காதலிக்கு தேவையான பொருட்களை நரேந்திரன் வாங்கி கொடுத்துள்ளார். செலவுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் சத்யஸ்ரீ கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளர் பணியில் சேர்ந்தார். அப்போது அங்கு பணியாற்றி வரும் வாலிபர் ஒருவருடன் சத்யஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் காதலி மீது நரேந்திரன் சந்தேகமடைந்தார். 3 வருடங்களாக தான் காதலித்து வரும் நிலையில் சத்யஸ்ரீ வேறு ஒரு வாலிபருடன் பழகி வருவது பிடிக்கவில்லை. இது பற்றி கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் சத்யஸ்ரீயுடன் நரேந்திரன் பழகி வந்துள்ளார். அவ்வப்போது அவிநாசியில் இருந்து மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
சம்பவத்தன்று சத்யஸ்ரீயின் செல்போனை தொடர்பு கொண்ட போது அவர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவர் பழகி வந்த வாலிபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அவரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதனால் இருவரும்தான் பேசிக் கொண்டிருக்கி ர்கள் என்று நரேந்திரன் சந்தேகப்பட்டு ஆத்திரமடைந்தார்.
நேற்று அவிநாசி வந்த நரேந்திரன் சத்யஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்த போது அவர் பழகி வந்த வாலிபருக்கு கூகுள் பே மூலம் பணபரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
இதில் மிகவும் ஆவேசமடைந்த நரேந்திரன் நான் உனது செலவுக்கு பணம் அனுப்புகிறேன். ஆனால் நீ வேறு ஒரு வாலிபருக்கு பணம் அனுப்புகிறாயா என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் அவிநாசியில் இருந்து திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். போகும் வழியில் சத்யஸ்ரீயிடம் உன்னை கொலை செய்ய வேண்டும் என்பது போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதனை சத்யஸ்ரீ பொருட்படுத்தவில்லை.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சத்யஸ்ரீயை விட்டு விட்டு அங்கிருந்து சென்ற நரேந்திரன் கடையில் கத்தி வாங்கி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துக்கொன்று விட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். தற்போது நரேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கூறிய தகவல்களை நரேந்திரன் போலீசில் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.