தமிழ்நாடு

மணக்கோலத்தில் சரிதா.

4 ஆண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்திய கில்லாடி பெண்

Published On 2022-09-29 05:09 GMT   |   Update On 2022-09-29 05:09 GMT
  • சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.
  • மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தாசப்பகவுண்டர் புதூர்.

இந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ், கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர்.

இதற்காக புளியம்பட்டி பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்கள் சரவணனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.

இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகள் சரிதா (27) என்பவரை சரவணனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பார்க்கும் போது சரவணனுக்கு சரிதாவை பிடித்து போனது.

அவரது குடும்பப் பின்னணி குறித்து கேட்டபோது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அண்ணன் ஒருவர் திருமணமாகி கேரளாவில் வசிப்பதாகவும் கூறினர்.

மேலும் சரிதா ஈரோட்டில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி பேப்பர் கோன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) என்பவர் ஆதரவாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதனால் மனம் இறங்கிய சரவணன் ஆதரவற்ற ஏழை பெண்ணை திருமணம் செய்தால் குடும்பம் நன்றாக இருக்கும் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 20.8.2022 அன்று சரவணன் தனது சொந்த ஊரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சரிதாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும் புரோக்கர்கள் 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக சரவணன் கொடுத்தார். மன வாழ்க்கையை தொடங்கிய சரவணன் மனைவி சரிதா மீது அளவு கடந்த பாசம் வைத்தார். தாய் தந்தையை இழந்த பெண் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார். இப்படியாக சில வாரங்கள் இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக ஓடியது.

இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை செல்போன் வடிவில் சரவணனுக்கு பேரடியாக வந்து விழுந்தது. ஒரு நாள் மனைவியின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார்.

அப்போது வாட்ஸ்அப்பில் சரிதா அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு 2 வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்த சரவணன் போனில் பேசியிருக்கலாமே ஏன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று சந்தேகம் அடைந்து அந்த வாய்ஸ் மெசேஜை கேட்டார்.

அதில் இங்கு எல்லோரும் இருப்பதால் பிரியாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போகனும். பார்க்க ஆள் இல்லை. ஏதாவது பொய் சொல்லு. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு. பெரியப்பா பாப்பாவை காலேஜில் சேர்க்க போயிட்டார். நான் தனியாக இருக்கேன். இந்த வாரம் பெட்ல சேர சொல்லி இருக்காங்கனு சொல்லு.

இங்க இருந்துட்டு 10 பைசா என்னால மிச்சம் பண்ண முடியாது. இங்கே ஒரு குறையும் இல்லை என்று பேசி உள்ளார்.

அடுத்த ஆடியோவில், இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி நீயா வா. ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன். வேறு ஏதாவது கனெக்சன் இருக்கானு பாரு. அவன் கிறுக்கனா இருக்கனும். ஒரு வாரத்துல போயிட்டு ரிட்டர்ன் இங்க வரனும். வேறு ஏதாவது ஆள் இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இந்த மாதிரி விவரமான ஆளு வேண்டாம்.

வயசு அதிகமாக இருக்கிற மாதிரி, போனால் இரண்டு நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போயி வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை இருக்கு. ஏகப்பட்ட சிக்கலில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பிரியா பேச முடியலை. அவர்கிட்ட இந்த வாரம் ஊருக்கு போகனும் என்று சொல்லி இருக்கேன். நீ வந்து அழைச்சுட்டு போக வந்தா விட்டுடுவாங்க. வந்து அழைச்சுட்டு போ, ஓடி போயிட மாட்டேன். நான் ஓடி போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும். அதுவும் ஒரு பயமா இருக்கு. ரொம்ப பாசமாக இருக்காங்க. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன். இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு. நீ வந்தால் போதும் என்று பேசி இருந்தார்.

இதைக்கேட்ட சரவணன் அதிர்ச்சியில் உறைந்து போனார். பாசம் வைத்த மனைவி மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்தவர் ஒரு வாரமாக விரக்தியில் இருந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறினார்.

அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சரவணனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி வாய்ஸ் மெசேஜ் குறித்து சரவணன் எதுவும் காட்டி கொள்ளாமல் சரிதாவிடம் தனது நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும் உனது பெரியம்மாளை பார்க்க சொல் என்று கூறினார்.

அதன்படி சரிதா தனது பெரியம்மாளிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் கணவரை பிரிந்ததாக ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்தார். நண்பருக்கு பெண் பிடித்து விட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரவணன் கூறினார். அதன்படி ரூ.80 ஆயிரம் கமிஷன் பேசப்பட்டது.

இதனை அடுத்து சரிதாவின் பெரியம்மாள் ஒரு காரில் ஒரு பெண்ணை தாசப்பன்கவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார். அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து சரவணன் மடக்கி பிடித்தார். இதனால் விஜயலட்சுமி, சரிதா மற்றும் விஜயலட்சுமியுடன் வந்த பெண் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருமணம் செய்ய வந்த பெண்ணை விசாரித்த போது அவர் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் என்பவரது மனைவி விஜயா (36) என்பது தெரிய வந்தது. சரிதா உள்பட 3 பேரிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரித்த போது இவர்கள் திருமணம் ஆகாத வயதான வாலிபர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறி வைத்து திருமண கமிஷனுக்காக இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சரிதா ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை இதேபோன்று மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவரிடம் 2½ லட்சம் ரூபாய் பறித்து கொண்டு தப்பியதும் அந்த டிரைவர் சரிதாவை தேடி கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு வெளியே தெரிந்தால் அவமானம் என்று விரட்டி விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

சரிதாவின் பெரியம்மாளாக நடித்த விஜயலட்சுமியின் கணவர் ராமேஸ்வரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து ஓய்வுபெற்றவர். சரவணனின் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அழைத்து வந்த கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் மனைவி விஜயாவிற்கு 21 வயதில் ஒரு மகளும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சரிதா மேலும் இதே போன்று 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுபோக இந்த மோசடி கும்பல் இன்னும் நிறைய பேரை ஏமாற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News