தமிழ்நாடு

கங்கைகொண்டான் அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2023-05-04 07:40 GMT   |   Update On 2023-05-04 08:36 GMT
  • போலீசாரின் செயலை கண்டித்து அணைத்தலையூர் பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
  • அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கயத்தாறு:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று பால்குட ஊர்வலம் நடை பெற்றது. வழக்கமாக கங்கைகொண்டான் பெருமாள் கோவில் முன்பிருந்து தொடங்கும் பால்குட ஊர்வலம் அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும்.

இந்நிலையில் வழக்கமான பாதைக்கு மாற்றாக வேறு பாதை வழியாக பால்குட ஊர்வலம் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் வழக்கமாக ஆண்டுதோறும் நாங்கள் செல்லும் வழியாக பால்குட ஊர்வலம் கொண்டு செல்வோம் என்று பொது மக்கள் தெரிவித்த போதும், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

பின்னர் மாற்றுப்பாதை வழியாக பால்குட ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது.

இதற்கிடையே போலீசாரின் செயலை கண்டித்து அணைத்தலையூர் பொது மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இன்று முப்பிடாதி அம்மன் கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் சீதா லட்சுமி, சந்திரசேகர், கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News