பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்... மருத்துவமனை அறிக்கை
- விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியிருந்த சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
- சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டது.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்கு நுரையீரலில் தொற்றும் ஏற்பட்டது. சளியும் அதிகரித்தது. இதனால் அவர் மூச்சுவிட கூட முடியாமல் திணறினார்.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டப்பட்ட மருத்துவ குறிப்பில் விஜயகாந்த் உடல் நிலை தேறிய நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் 14 நாட்கள் வரை அவருக்கு சிகிச்சை தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் கவலை அடைந்தனர். ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
அதே நேரம் அன்றைய தினம் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் விஜயகாந்த் நலமோடு இருப்பதாகவும், விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் அறிவித்து இருந்தார்.
அதன் படி விஜயகாந்த்தும் பூரண குணம் அடைந்து இன்று காலையில் வீடு திரும்பினார்.
இது பற்றிய அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இன்று காலை 7.30 முதல் 9 மணி வரை ராகுகாலம் இருந்ததால் ராகு காலம் முடிந்த பிறகு காலை 10 மணி அளவில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். அவருடன் பிரேமலதாவும் உடன் சென்றார். சாலிகிராமத்தில் உள்ள வீட்டை அடைந்ததும் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.