தமிழ்நாடு செய்திகள்

பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட பெண்

Published On 2022-06-12 17:36 IST   |   Update On 2022-06-12 17:36:00 IST
  • மின்னல் வேகத்தில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் சீறிப் பாய்ந்தன.
  • வாலிபர் ஒருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பெண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

தாம்பரம்:

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை, மெரினா கடற்கரை சாலைகளில் வார இறுதி நாட்களில் பைக்ரேஸ் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்தாலும் பைக்ரேஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில் பைக்ரேஸ் வாலிபர்களால் அப்பாவி பெண் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் மற்றொரு பெண் ஒருவரும் தனியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி பேசியபடி சென்றதாக தெரிகிறது.

அப்போது அவ்வழியே மின்னல் வேகத்தில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் சீறிப் பாய்ந்தன. சில வாலிபர்கள் பயமுறுத்தும்படி பைக்ரேசில் வந்தனர். இதி்ல் வாலிபர் ஒருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பெண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியது.

இதில் பல அடிதூரம் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் சாலையோர தடுப்பில் மோதி விழுந்தார். அந்த வேகத்தில் அவர் அணிந்து இருந்த ஹெல்மெட்டும் கழன்று ஓடியது.

இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவரது கால் எலும்பும் முறிந்து மயக்கம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை கண்டு பலியான பெண்ணுடன் வந்த மற்றொரு பெண் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விஸ்வா தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக்ரேசில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நடந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரேசில் ஈடுபட்ட மற்ற நண்பர்கள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. பலியான பெண் வைத்திருந்த கைப்பையில் போலீசார் கேண்டீன் கார்டு ஒன்று இருந்தது.

அதில் காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே உயிரிழந்தவர் போலீஸ் அதிகாரி செல்வக்குமாரியா? அல்லது வேறு யாராவதா? என்று விசாரித்து வருகிறார்கள்.

பைக் ரேசால் அநியாயமாக பெண் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News