தமிழ்நாடு

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது - உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-12-09 13:33 GMT   |   Update On 2023-12-09 13:33 GMT
  • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம்.
  • இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும் இதற்கான பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தி.மு.க. தெரிவித்து வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும், இந்த திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன்படி கையெழுத்து இயக்கம் துவங்கி இன்றுடன் (டிசம்பர் 09) 50 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 


அதில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த #நீட்_விலக்கு_நம்_இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது."

"'50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்' என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது."

"இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்."

"இந்த கையெழுத்துகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

"நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News