தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வு.. சிறு வணிகர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது.. உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-10-01 14:54 GMT   |   Update On 2023-10-01 14:54 GMT
  • இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.
  • சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இன்று முதல் சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பதிவில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்."

"ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News