தமிழ்நாடு

கடும் விலை வீழ்ச்சி- கால்நடைகளுக்கு தீவனமாக கொட்டப்பட்ட தக்காளி

Published On 2023-09-13 05:00 GMT   |   Update On 2023-09-13 05:00 GMT
  • உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம்:

தக்காளி விலை கடந்த சில மாதங்களில் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60 வரை விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள், தக்காளிகளை அதிகளவில் பயிரிடத் தொடங்கினர். இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.

உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது ரூ.10-க்கும் குறைவாக விலை கேட்கின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு நேற்று எடுத்துச் சென்ற போது மிகவும் குறைந்த விலையில் மட்டுமே விலை போனதால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து தக்காளியை விற்பனை செய்யாமல் காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுக்கு தீவனமாக போட்டு சென்றார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் தேவையான தக்காளியை எடுத்து சென்றனர்.

Tags:    

Similar News