தமிழ்நாடு

ஜல்லிக்கட்டை பார்க்க வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

Published On 2022-12-01 07:42 GMT   |   Update On 2022-12-01 10:56 GMT
  • ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
  • ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு வக்கீல் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை:

பொங்கல் பண்டிகையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) மதுரை அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை தமிழக அரசு வைத்தது.

தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, 'ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பொழுதுபோக்கு போட்டி இல்லை. காலம் காலமாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும். 18 மாதம் முதல் ஆறு வயதுக்குள் இருக்கும் நாட்டுமாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்படும். அதன் பின்னர் வயது முதிர்ந்த காளை மாடுகளை வீட்டில் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, போட்டியில் பங்கு பெற சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதனை துன்புறுத்தல் என்று கூற முடியாது.' என குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் காளை அவிழ்த்து விடப்படும்போது அதனை அடக்குவதாக பலர் காளை மீது பாய்கிறார்களே?' எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, 'பலர் காளையை அடுக்குவதாக காளை மீது பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் அந்த காளையை விட்டு விடுவார்கள். போட்டி நடக்கும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் அந்த காளையின் மீது பாய்ந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விதி போட்டியின்போது மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது' என தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

Tags:    

Similar News