தமிழ்நாடு

தி.மு.க. அரசு அடுக்கடுக்கான சாதனைகள் செய்கிறது- திருச்சி சிவா எம்.பி. பேச்சு

Published On 2022-07-03 08:17 GMT   |   Update On 2022-07-03 08:17 GMT
  • பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.
  • திராவிட மாடல் ஆட்சி. அடிப்படையில் இந்த நாடு வேளாண் தொழில் சார்ந்த நாடு.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருச்சி சிவா எம்.பி. தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசியதாவது-

எல்லோருக்கும் எல்லாம், இந்நாட்டில் கிடைக்கும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அடிப்படையில் இந்த நாடு வேளாண் தொழில் சார்ந்த நாடு. அடுத்த நாடுகளிடம் எதற்கு வேண்டுமானாலும் போய் நிற்கலாம். ஆனால் சோற்றுக்கு நிற்கக்கூடாது என வேளாண் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் இருந்தது. அதன்படி தொடர்ந்து தி.மு.க. அரசு வேளாண் தொழிலை பாதுகாத்து வருகிறது.

அண்ணாவிற்கு பிறகு கருணாநிதி முதல்-அமைச்சர் ஆன பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்தார். ஏழை மக்களை மாடி வீட்டில் உட்கார வைத்த பெருமை தி.மு.க.வை சாரும். ஏழை மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரில் குடிசைகள் இல்லை. எல்லாம் கோபுரங்கள் தான்.

முதல் முதலாக நில உச்சவரம்பு கொண்டு வரப்பட்ட காரணத்தினால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நில சொந்தக்காரர்களாக மாறினார்கள். அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளை விற்க முடியாமல் தடுமாறுகிறார்கள் என்பதற்காக நுகர்ப்பொருள் வாணிப கழகத்தை உருவாக்கி அங்கு பொருட்களை வாங்கினார். மக்களுக்கு சென்று சேர வேண்டும். அது நியாமான விலையில் கிடைக்க வேண்டும் என கருதி நியாய விலை கடை மூலமாக மக்களுக்கு வழங்கினார்.

அடுத்ததாக இலவச மின்சார திட்டம் இந்தியாவில் முதல் முதலாக கொண்டு வந்தார். அதேபோல் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டது. மிகப்பெரிய சாதனை . இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாதது.

1989-ம் ஆண்டில் பெண்களுக்கு சீர்வரிசை போதாது அவர்கள் திருமணம் ஆகி போகும்போது பிறந்த வீட்டில் சொத்திலும் உரிமை உண்டு என சட்டத்தை கொண்டு புரட்சியை ஏற்படுத்தியவர் தலைவர் கருணாநிதி தான். இந்த திட்டத்தை தான் தற்போது இந்தியா முழுவதும் பின்பற்றுகிறார்கள்.

இலவச கல்வி, இலவச பேருந்து, இலவச பாட புத்தகங்கள் கொண்டு வரப்பட்டது. தொழில் கல்வி படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு அளித்திருக்கிறார். இதேபோல் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்துள்ளார். இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News