மத்திய சென்னை உள்பட 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் இல்லை
- தமிழ்நாட்டில் மொத்தம் 7 தனித் தொகுதிகள் உள்ளன.
- விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் வடசென்னையில் 35 பேர், மத்திய சென்னையில் 31 பேர், தென்சென்னையில் 41 பேர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பலமுனை போட்டி இருந்தது. அப்போது 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இப்போது 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 65-ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மத்திய சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிட வில்லை.
தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடும் 950 பேரில் 874 பேர் ஆண்கள். 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 தனித் தொகுதிகள் உள்ளன. அதில் விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் 10 பேர் போட்டியிடுகின்றனர். பாராளுமன்ற தேர்தலுடன் இங்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறவைடைகிறது.
தேர்தலுக்கு பிறகு வாக்கு எந்திரங்களை போலீசார் பாதுகாப்பு பத்திரமாக வைத்திருந்து ஜூன் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.