மலைவாழ் மக்களுக்கு எதிராக தீண்டாமை சுவர் கட்டப்பட்டதால் பரபரப்பு- சுவரை அகற்றக்கோரி போராட்டம்
- பொது வழிப்பாதையை மறித்து தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளனர்.
- ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சுமார் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் வந்து செல்லும் பொது வழிப்பாதையை மறித்து தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளனர். இந்த சுவற்றை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மலை வாழ்மக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தீண்டாமை சுவரை அகற்ற கோரியும், இங்குள்ள பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால், வட்ட செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எழிலரசன், செயலாளர் கன்னியப்பன், மாவட்ட துணை செயலாளர் பத்மா, தீண்டாமை ஒழிப்பு சங்க பூண்டி ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான பழங்குடி இன பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் தீண்டாமை சுவரை அகற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.