தமிழ்நாடு

சிவகாசி ஆலை வெடிவிபத்து- மேலும் ஒருவர் கைது

Published On 2024-05-10 03:03 GMT   |   Update On 2024-05-10 04:22 GMT
  • பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
  • தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 57). அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.

நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். அங்கு நேற்று மதியம் 2.10 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில் ஆலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தன. 8 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின. வெடி விபத்து நடந்ததும் அறைகளில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓடினர். அவர்களில் சிலர் வெடிவிபத்தில் சிக்கினர். பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டனர்.

இந்த பயங்கர வெடி விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் சிலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில், ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில் ஆலை ஒப்பந்ததாரார் முத்து கிருஷ்ணனை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News