தமிழ்நாடு செய்திகள்

அனைவரையும் அரவணைத்து செல்கின்ற ஆற்றல் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு- முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

Published On 2022-10-18 11:03 IST   |   Update On 2022-10-18 11:03:00 IST
  • தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார்.
  • மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்தி, ஆட்சியை பிடிக்க முடியும். அ.தி.மு.க மத்திய அரசையும், மாநில அரசையும் கொள்கை ரீதியாக ஒரு சேர எதிர்த்து அரசியலில் பயணித்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இதைத்தான் 2014-லிருந்து 2016 வரை ஜெயலலிதா செய்தார்.

மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது. அதனை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல அ.தி.மு.க தவறி விட்டது. அ.தி.மு.க.வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை.

எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு ஒரு பொதுவான தலைவராக அவர் இருக்க முடியும். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்க்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என்று நான் சொன்னதால் தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

அ.தி.மு.கவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள பொறுப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் வந்தால் கண்டிப்பாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக் கொள்வார்.

தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் ஒன்று சேருங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறார். இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் சசிகலாவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால் ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உடனிருந்து பக்குவம் பெற்றவர். அவரால் தான் பொதுவான தலைவராக இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News