தமிழ்நாடு செய்திகள்

அரசு கலைக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2024-06-18 12:10 IST   |   Update On 2024-06-18 13:14:00 IST
  • மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும்.
  • கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது. அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மே மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் பணியிடங்களை அரசு நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், நிலையான முதல்வர்களை நியமிப்பதற்கு மாறாக பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முயல்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.

கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News