தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு எதிரான பதிவுகள் முகநூல் தளத்தில் நீக்கப்படுகிறது- தி.மு.க.வினர் குற்றச்சாட்டு

Published On 2023-11-25 08:10 GMT   |   Update On 2023-11-25 08:10 GMT
  • மறைமுகமாக எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகத்தான் அர்த்தம் என்றனர்.
  • நீட்டுக்கு எதிரான ஹேஷ்டேக்கிற்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை:

நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு நமது இலக்கு என்ற பெயரில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக கட்சி தொண்டர்கள் வெளியிடும் பதிவுகளை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி வருவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மாநில துணை அமைப்பு செயலாளரான எஸ்.ஆஸ்டின் தனது முகநூல் பதிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஊடக தள பதிவுகளை அகற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்று சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

தி.மு.க.வின் மகளிர் பிரிவு சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் யாழினியும் புகார் தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை பேஸ்புக் 'தவறாக வழி நடத்துவது' என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் தவறான முடிவுகளை தடுக்க போராடும் பதிவுகளை அகற்றுவது மறைமுகமாக எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகத்தான் அர்த்தம் என்றனர்.

இந்தி திணிப்பு, பகுத்தறிவு அல்லது நீட் உள்ளிட்ட அரசியல் தலைப்புகளில் வெளியிடப்படும் பதிவுகளை கடந்த காலங்களிலும் இது போன்று தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்கள்.

ஆனால் நீட்டுக்கு எதிரான ஹேஷ்டேக்கிற்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News