தமிழ்நாடு செய்திகள்

ராஜ்பவன் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு: டெல்லிக்கு அறிக்கை அனுப்ப கவர்னர் முடிவு

Published On 2023-10-26 11:08 IST   |   Update On 2023-10-26 12:05:00 IST
  • பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கையை கவர்னர் கேட்டுப்பெற உள்ளார்.
  • 2 அறிக்கைகளும் கிடைத்த பிறகு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் 1-வது எண் நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கவர்னர் மாளிகை மீதான இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கவர்னரின் துணை செயலாளர் செங்கோட்டையன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்டமான புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் தமிழக கவர்னருக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் வாய்மொழி தாக்குதலை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டு தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது தடி மற்றும் கற்களால் கவர்னர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில்தான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கவர்னரின் பாதுகாப்பு சீர்குலைந்து போய் இருப்பதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

எனவே 124 ஐ.பி.சி. சட்டப் பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னர் மாளிகை தரப்பில் தமிழக போலீசுக்கு நேற்று மாலையில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் இந்த சட்டப் பிரிவில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு விரிவாக அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளார். பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கையை கவர்னர் கேட்டுப்பெற உள்ளார்.

அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தும், தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தொகுத்து கவர்னர் தனது அறிக்கையில் குறிப்பிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ஆர்.என். ரவி பல்வேறு விஷயங்களில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எதிராக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியினரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

குறிப்பாக சனாதனம் பற்றி அவர் பேசிய கருத்துகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிரான கோப்பில் கையெழுத்திடாமல் இருப்பது, ஆரியம் மற்றும் திராவிடம் பற்றிய பேச்சுக்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் கவர்னருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது பற்றியும் மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பும் அறிக்கையில் விரிவாக குறிப்பிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இதுவரை தமிழக அரசுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டை தமிழக அரசு தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறது.

இப்படி கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுள்ள போராட்டங்கள், அரசியல் பிரமுகர்கள் தன் மீது வைத்துள்ள விமர்சனங்கள் போன்றவற்றையும் கவர்னர் ஆர்.என். ரவி தனது அறிக்கையில் விரிவாக குறிப்பிட உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அறிக்கையை அனுப்புகிறார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட சட்டப் பிரிவை பயன்படுத்த தான் வைத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கவர்னர் ஆர்.என்.ரவி தனது அறிக்கையில் குறிப்பிட உள்ளார்.

இந்த அறிக்கையை கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதே போன்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும், பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்புகிறார்கள். இந்த 2 அறிக்கைகளும் கிடைத்த பிறகு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசின் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக மத்திய அரசுக்கு தனியாக அறிக்கை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசி கைதாகி இருக்கும் கருக்கா வினோத் தானாகவே இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது அவரது பின்னணியில் யாரும் உள்ளனாரா? என்பது பற்றி தமிழகத்தில் பணிபுரிந்து வரும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News