தமிழ்நாடு

தாம்பரம் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் 3½ வயது சிறுவன் பலி

Published On 2023-09-01 06:56 GMT   |   Update On 2023-09-01 06:56 GMT
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வினோதா. இவர்களது மகன்கள் நித்தின், ருத்ரேஷ் (வயது 3½).

நேற்று முன்தினம் மாலை ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் நடுவீரப்பட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நடிகர்கள் ஷாருக்கான்-விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நித்தின் மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்திலும், பின்பக்க இருக்கையில் வினோதா மகன் ருத்தரேசை கையில் பிடித்தபடி இருந்தனர்.

இரவு 10 மணியளவில் சோமங்கலம்-தாம்பரம் சாலையை கடக்க முயன்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதி நிலை தடுமாறியது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியின் மீதும் மோட்டார் சைக்கிள் மோதி சரிந்தது. இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தோடு சாலையில் விழுந்தார். சாலையில் விழுந்த வேகத்தில் சிறுவன் ருத்ரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமகிருஷ்ணன், அவரது மனைவி வினோதா, மற்றொரு மகன் நித்தின் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தலையில் பலத்த காயம் அடைந்து இருந்த ருத்ரேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி திருமுடிவாக்கம் பகுதியில் நாகம்மாள் என்பவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் திடீரென புகுந்த மாடு மீது மோதியதில் கீழே விழுந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து தாயுடன் வந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News