தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2023-05-18 04:50 GMT   |   Update On 2023-05-18 04:50 GMT
  • தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
  • அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை ஆறு மாதம் காலந்தாழ்த்தி வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

இந்தச் சூழ்நிலையில், 1.1.2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும்.

ஆனால், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு 1.4.2023 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட்ட தி.மு.க. அரசு, நான்காவது அகவிலைப்படி உயர்வை மூன்று மாதத்திற்கு தள்ளிப்போட்டு இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி விட்டு, 'நிதிப் பற்றாக்குறை' குறைக்கப்பட்டுவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை' குறைந்து விட்டது என்று கூறுவது நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே நிலவுகிறது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News