தமிழ்நாடு

3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Published On 2024-04-25 04:14 GMT   |   Update On 2024-04-25 04:14 GMT
  • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
  • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News