தமிழ்நாடு செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதை ஏற்க முடியாது- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-06-13 09:23 IST   |   Update On 2023-06-13 09:23:00 IST
  • காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம்.
  • பொதுக்கலந்தாய்வினை மத்திய மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம், பட்டயப் படிப்பு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் தயாரித்தல், கலந்தாய்வு நடத்துதல் மற்றும் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் தேர்வுக் குழுவால் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. இதன்மூலம் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கலந்தாய்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் 2.6.2023 நாளிட்ட அறிவிக்கை எண் 367-ஐ மத்திய அரசிதழில் அனைத்து இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை எந்த முகமையின் மூலம் எந்த முறையில் கலந்தாய்வு நடத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், தமிழ்நாட்டில் உள்ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாநிலத்திற்குட்பட்ட மருத்துவ இருக்கைகளை மாநில அரசு நிரப்புவது என்பதுதான் பொருத்தமுடைய ஒன்று. அப்பொழுது தான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு ஆகியவை காப்பாற்றப்படும்.

மேலும், மாநிலத்திற்குட்பட்ட மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டு மாணவ, மாணவியருக்குத்தான் கிடைக்கிறதா என்பதும் உறுதிப்படுத்தப்படும்.

இது மட்டுமல்லாமல், காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, பொதுக்கலந்தாய்வினை மத்திய மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கொடுத்து மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News