புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை
- கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
- சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
சென்னை:
சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.
அது மட்டுமல்ல இந்தியாவிலும் கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நுழைந்து விட்டது.
இந்த வைரஸ் இதுவரை 3 பேருக்கு வந்து விட்டது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இது பரவும் என்பதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் இறப்பு இல்லை என்றாலும் கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்த மீண்டும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில், தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் அதை பரவாமல் கட்டுப்படுத்த என்னென்ன செய்யப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளதால் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா பரவிய சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அரசு சார்பில் விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.