தமிழ்நாடு

திருப்போரூர் அருகே சினிமா பட பாணியில் தொழில் அதிபரிடம் கள்ளக்காதலியை பழக வைத்து பணம் பறித்த கும்பல்

Published On 2023-01-31 08:54 GMT   |   Update On 2023-01-31 08:54 GMT
  • பணம் பறிப்பில் ஈடுபட்ட பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • கைதான ரஞ்சிதா அழகுக் கலை நிபுணர். அவர் மாமல்லபுரம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

திருப்போரூர்:

திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (40). தொழில் அதிபர். இவர் மறைமலை நகர் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

இவர் தொழிலாளர்களின் 'பி.எப்.' பணத்தை அவர்களின் கணக்கில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர் அஞ்சூரை சேர்ந்த பிரபாகரன், அம்மனம் பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன் ஆகியோரிடம் கூறினர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரபாகரன், கன்னியப்பன் ஆகியோர் திருப்போரூரை அடுத்த மேட்டுத்தண்டலம் பகுதியை சேர்ந்த பிரசன்ன பாலாஜியுடன் சேர்ந்து தொழில் அதிபர் பாஸ்கரிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு உடந்தையாக பிரசன்ன பாலாஜி தனது காதலியான வடகடம்பாடியை சேர்ந்த ரஞ்சிதாவை பயன்படுத்த திட்டமிட்டார்.

அவர்களது திட்டப்படி ரஞ்சிதா கடந்த ஒரு மாதமாக செல்போன் மற்றும் சமூக வலைதளம் மூலம் பாஸ்கரிடம் நட்பாக பழகினார். மேலும் காதலிப்பதாகவும் கூறி ஏமாற்றினார்.

இதனை உண்மை என்று நம்பிய பாஸ்கர், ரஞ்சிதாவுடன் பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றினார். ரஞ்சிதாவின் அழகில் மயங்கி அவருக்கு தேவையான பண உதவிகளும் செய்தார்.

இதற்கிடையே கடந்த 27-ந்தேதி பாஸ்கரும், ரஞ்சிதாவும் திருப்போரூர் அருகே உள்ள சிறுங்குன்றம் வனப்பகுதிக்கு சென்றனர். அவர்கள் தனிமையில் இருந்த போது திடீரென பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி ஆகியோர் வந்தனர்.

அவர்கள் பாஸ்கரை சரமாரியாக தாக்கினர். அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரத்தை 'கூகுள் பே' மூலம் பறித்தனர். பின்னர் அவரது 2 செல்போன்களையும் பறித்துவிட்டு இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அப்போது ரஞ்சிதாவை அவர்கள் தெரிந்தவர் போல் காட்டிக் கொள்ளவில்லை. மேலும் ரஞ்சிதாவும், பாஸ்கரும் சேர்ந்து இருப்பது போல் தங்களது செல்போனில் படம் எடுத்து விட்டு தாங்கள் கேட்கும் போது பணம் தர வேண்டும் என்று மிரட்டி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் வெளியில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். ரஞ்சிதாவும் அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து பாஸ்கர் திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் வழிப்பறி கும்பல் தாக்கியதாக கூறினார். எனினும் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது தான் பாஸ்கர், இளம்பெண் ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த போது இந்த வழிப்பறி சம்பவம் நடந்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவை அழைத்து தனியாக விசாரித்தனர். அவரது செல்போனையும் ஆய்வு செய்தனர். அப்போது பாஸ்கரிடம் இருந்து 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பப்பட்ட செல்போன் எண் ரஞ்சிதாவின் செல்போனில் இருப்பது தெரிந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையின் போது ரஞ்சிதா தனது கூட்டாளிகளான பிரபாகரன், கன்னியப்பன் மற்றும் காதலன் பிரசன்ன பாலாஜி ஆகியோரின் ஏற்பாட்டில் பாஸ்கரை காதல் வலையில் வீழ்த்தி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

இதனை கேட்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். சினிமா பட பாணியில் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறித்து இருப்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்ட பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் கைதான ரஞ்சிதா அழகுக் கலை நிபுணர். அவர் மாமல்லபுரம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கணவரை பிரிந்த அவர் பிரசன்ன பாலாஜியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

பணம் பறிக்கும் கும்பலுக்கு உதவி செய்து தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.

கைதான ரஞ்சிதா உள்ளிட்ட 4 பேரும் இதேபோல் மேலும் பலரிடம் பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News