தமிழ்நாடு செய்திகள்

தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கின்றனர்- அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2023-12-23 12:01 IST   |   Update On 2023-12-23 12:01:00 IST
  • யாரும் எதிர்பாராத அளவில் கனமழை பெய்துள்ளது.
  • அரசியல் செய்யும் நோக்கத்துடன் பேசுகின்றனர்.

எட்டயபுரம்:

தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மலிவான விலையில் காய்கறிகளை கொண்டு சேர்க்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் 50 டிராக்டர்கள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் இருந்து 4-வது நாளாக இன்று புறப்பட்ட வாகனங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-


யாரும் எதிர்பாராத அளவில் கனமழை பெய்துள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்கும் வேண்டும் என்பதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் கடந்த 4 நாட்களாக 70 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக நிவாரணம் அளித்துள்ளார். மேலும் களத்தில் அதிகாரிகள் இறங்கி பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டார். விவசாயிகள், மக்களுக்கு நன்மை தர வேண்டும் என்பதற்காக நமது உணர்வினை அவர்களுக்கு தெரிவித்தோம். ஆனால் அதை அவர்கள் அரசியலாக பார்க்கின்றனர். அரசியல் செய்யும் நோக்கத்துடன் பேசுகின்றனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்கின்ற வார்த்தைகள் கூட மென்மையாக இல்லை. அதில் ஒரு அனுதாபம் கூட இல்லை. அதைத்தான் மக்கள் வேதனையாக பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News