மகளிர் உரிமைத்தொகைக்கும், மதுபான விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை- அமைச்சர் பேட்டி
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் மற்றும் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்கள் குறித்து நாங்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்திற்கும் முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். அவரே நேரடியாக வந்து திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார்.
மத்திய அரசு சார்பில் மருத்துவமனை தர சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிதி கிடைக்கும். அதன் அடிப்படையில் இன்று ஈரோடு அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்ய வந்துள்ளோம். மருத்துவமனை அருகே பாலம் அமைக்கும் போது சர்வீஸ் சாலை அமைக்காமல் விட்டு விட்டார்கள்.
இப்போது சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றால் மருத்துவமனை இடம் பாதிக்கப்படும். ஆனால் கண்டிப்பாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும், மதுபான விலை உயர்விற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மதுபான விலை உயர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.மேலும் அனைத்து மதுவிற்கும் விலை உயர்த்தவில்லை.எனவே இரண்டையும் தொடர்பு படுத்துவது சரியாக இருக்காது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும் பகுதியான வேலை முடிந்து விட்டது. திட்டத்தின் தொடக்க பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் சோதனையோட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் முடிக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்படும் தேதி ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மாலை தமிழக அமைச்சர்களின் சொத்து பட்டியலை தமிழக ஆளுநரிடம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,
அண்ணாமலை அவர் வேலையை செய்கிறார். அவர் என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்தால் எங்கள் வேலை கெட்டுபோய்விடும். எங்களுடைய வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.