தமிழ்நாடு

அரசு மரியாதை கொடுப்பதால் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2023-11-17 09:04 GMT   |   Update On 2023-11-17 10:14 GMT
  • உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.
  • இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

சென்னை:

விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்த 26 வயது வாலிபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.

உறுப்புகளை தானமாக பெற்ற பிறகு அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இறந்து போன வாலிபரின் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தாயார் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர்கள் இறந்து போன மகனின் உடல் உறுப்புகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தானமாக வழங்கி இருக்கிறார்கள். இதயம், கல்லீரல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்விழி திரைகள் எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கைந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளார்கள்.

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து 55 நாட்கள் ஆகிறது. இந்த குறுகிய கால கட்டத்தில் 26 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்கள். அதே போல் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.

தற்போது 7007 பேர் உறுப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 8 பேருக்கு இதயம், 68 பேருக்கு நுரையீரல், 25 பேருக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. 6,729 பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. 42 பேருக்கு சிறுநீரகம், கல்லீரல் இரண்டும் தேவைப்படுகிறது. இதயமும், கல்லீரலும் ஒருவருக்கு தேவைப்படுகிறது.

இறந்த பிறகு அரசு மரியாதை என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதால் பலர் மனமுவந்து உறுப்புகளை தானம் செய்து வருகிறார்கள். இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News